சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கொளுத்தும் வெயில் நாளை(மே 4) முதல் தொடங்குகிறது. அதன் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கும் காலம் அக்னி நட்சத்திர காலமாகும். பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் என்பதால், இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். சித்திரை மாதம் கடைசி 8 நாட்கள் தொடங்கி வைகாசி மாதம் 15ஆம் தேதி வரைக்கும் (மே 4 முதல் 28 வரை) அக்னி நட்சத்திர காலமாகும். இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை மழையும் இந்த கால கட்டத்தில் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரம் அருந்தும்படியும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் நடப்பாண்டு அக்னி நட்சத்திர்ம் நாளை (மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. மே 28 ஆம் தேதி முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர் தானம், அன்னதானம், கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் அக்னி தேவனின் ஆசிர்வாதத்தை பெற முடியும். அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். ஆனால், வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலை முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல் , மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் ,பூமி பூஜை போன்றவற்றை செய்யக்கூடாது என்பது ஐதிகம்.
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதை முன்னிட்டு, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தள்ளது. அதாவது, வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் மேலும், வரும் வாரத்தில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனினும் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஅறிவுறுத்தப்பட்டுள்ளது.