சென்னை: மதுரை கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது பணிக் காலத்தில் மிக நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். மதுரை கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தார். இந்த வழக்கில் சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டு விசாரணை செய்து அறிக்கையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தனக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று மதுரை அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியிருந்தார். முன்னதாக சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்த நிலையில், அது கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி அரசுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், மேலும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாத தமிழக அரசு, எப்படி சாதாரண குடிமகனை பாதுகாக்கும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில்,  “யாருக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து உளவுத் துறை, காவல் துறையுடன் ஆலோசித்து உள் துறை முடிவு எடுக்கும். பாதுகாப்பு கோரி அளிக்கப்படும் கடிதத்தில் இருக்கும் விவரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக,   ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளியில் கொண்டு வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

இதுபற்றி சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வர வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ‘பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, தவறானது, முறையற்றது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில்கொள்ளாமல், பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. எனவே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலை இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று சகாயம் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

சகாயம் ஐஏஎஸ்-ஐ கடந்த 2014ம் ஆண்டில் அவர், குவாரிகளில் நடந்த சட்ட விரோத செயல்பாடுகள் பற்றி விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரித்த அவர், 1990ம் ஆண்டு முதல் நடந்த குவாரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. ‘நிலைமையின் தீவிரம் தெரியாமல், தவறான முடிவு எடுத்து என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. என்னை வெட்டி கனிம சுரங்கத்தில் வீசிவிடுவோம் என்று மிரட்டல்கள் வந்தன. மிரட்டல் கடிதங்கள் குறித்த தனது புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சகாயம் கூறினார்.

‘பாதுகாப்பை விலக்கும் முடிவை எடுத்தவர்கள், எனக்கு உள்ள அச்சுறுத்தல் பற்றி புரிந்து கொள்ளவில்லை’ என்று கூறியுள்ள சகாயம், சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஜெகபர் அலி கொலை, திருநெல்வேலியில் நடந்த ஜாகிர் உசேன் கொலை ஆகியவற்றை சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.