பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுடனான பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் இன்று தரையிறங்கியது.
இந்திய விமானப் படை தயார் நிலையில் உள்ளதை பறைசாற்றும் வகையில் பாகிஸ்தானிலிருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள இந்த விரைவுச் சாலையில் போர் விமானங்களின் பயிற்சி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான ஓடுபாதையில் விமானங்கள் முதல்முறையாக தரையிறங்கின.
அவசரகால தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த 3.5 கி.மீ. நீளமுள்ள புதிய சாலையில் ரஃபேல், மிராஜ் மற்றும் ஜாகுவார் விமானங்கள் தரையிறங்கின.

இந்தியாவில் முதல்முறையாக பகல் மற்றும் இரவு நேரங்களிலும் போர் விமானங்கள் இங்கு தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச் சாலையில் இந்திய விமானப்படை இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜலாலாபாத் பகுதியில் உள்ள பிரு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த விமான ஓடுதளத்தில் பகல் நேரத்தில் விமான அணிவகுப்பும் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்கும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.