பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று கூறிய அஜித் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
இந்தியா டுடே நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஓய்வு பெறுவது குறித்து கேட்டபோது, அஜித் ஒரு திகைப்பூட்டும் ஆனால் சிந்தனைமிக்க கருத்தைத் தெரிவித்தார்.

“நமக்கு எதுவும் தெரியாது! எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று நாம் திட்டமிட முடியாது ஆனால் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் வரும். எதையும் நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
தூங்கி எழுந்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கே தத்துவம் பேசவில்லை. நான் அறுவை சிகிச்சைகள் மற்றும் காயங்களைச் சந்தித்திருக்கிறேன். புற்றுநோயிலிருந்து தப்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உள்ளனர்.
உயிருடன் இருப்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை புரிந்துவைத்திருக்கிறேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நான் பயன்படுத்த விரும்புகிறேன் – அதை அதிகம் பயன்படுத்த விரும்புகிறேன்.”
எனக்கான நேரம் வரும்போது, ’நான் இந்த ஆன்மாவுக்கு ஒரு வாழ்க்கையைக் கொடுத்தேன், அவர் அதன் சாற்றை உறிஞ்சினார், அதன் ஒவ்வொரு நொடியையும் நேர்மறையான வழியில் பயன்படுத்தினார்’ என்று என்னை உருவாக்கியவர் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அஜித் கூறியுள்ளார்.
“திரைத்துறைக்கு வரவேண்டும் என்று ஒருபோதும் நான் திட்டமிட்டதில்லை, பள்ளிப் படிப்புக்குப் பின் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்யத் தொடங்கிய நான் 18 வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கிய நிலையில் அச்சு விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினேன்,” என்று தனது ஆரம்பகாலத்தை அஜித் நினைவு கூர்ந்தார்.