ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையை மேலும் தீவிரப்படுத்த NIA தலைவர் சதானந்த் டேட் நேற்று பஹல்காம் சென்ற நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதில், தாக்குதல் நடைபெறுவதற்கு 20 நாட்கள் முன்னதாகவே பயங்கரவாதிகள் குழு பஹல்காமில் முகாமிட்டிருந்ததாகவும், அவர்கள் தாக்குதலுக்கு சரியான இடத்தை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பேத்தாப் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு மற்றும் பிரபலமான பொழுதுபோக்கு பூங்கா மற்றும் லாவெண்டர் பூங்கா என பல்வேறு இடங்களை வேவு பார்த்த இவர்கள் கடைசியாக பைசரன் பள்ளத்தாக்கே தாக்குதலுக்குச் சரியான இடமாக தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பொழுதுபோக்கு பூங்காக்களில் கட்டண நுழைவு இருந்ததால் அதனை அவர்கள் தேர்வு செய்யவில்லை என்றும் பேத்தா மற்றும் அரு பள்ளத்தாக்கு ஆகியற்றுக்கு சீரான சாலை போக்குவரத்து இருந்ததை அடுத்து ராணுவம் மற்றும் காவல்துறையினர் விரைந்து வரக்கூடும் என்பதால் அதையும் தேர்வு செய்யவில்லை.

அதேவேளையில், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பைசரன் பள்ளத்தாக்கிற்கு சாலை வசதி எதுவும் இல்லாமல் இருந்ததும் பள்ளத்தாக்கைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருந்ததும் தவிர அங்கு சிசிடிவி எதுவும் பொறுத்தப்படாமல் இருந்ததும் இந்த இடத்தை தேர்வு செய்ய காரணமாக இருந்துள்ளது.

மேலும், ராணுவம் மற்றும் காவல்துறை அங்கு வந்து சேர சுமார் அரை மணி நேரமாவது ஆகும் என்று பாகிஸ்தான் பயங்கவாதிகளுக்கு உடந்தையாக இருந்த உள்ளூர் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்தே பைசரன் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சுமார் 15 நிமிட நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பின் சுமார் 4 அல்லது 5 கிலோ மீட்டர் மலை பாதை வழியாக சென்று அவர்கள் தப்பியதாகவும் NIA நடத்திய புலனாய்வில் துப்பு கிடைத்துள்ளது.