நெல்லை: மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. இதற்கிடையில், தங்களை மலையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக் கூடாது” என்று அரசை வலியுறுத்தி வரும் கூறிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள். சாதி, மதம் பார்க்காமல் வாழ்ந்த எங்களுக்கு சமத்துவபுரம்போல் மலையில் குடியிருப்பு அமைத்துத் தரவேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், விலையின்றி வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.11.54 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு பயனாளிகள் தொகையான சுமார் ரூ. 3 லட்சத்தை அரசே செலுத்த நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மே 25-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். குடியிருக்க வழியின்றி தவித்து வரும் எங்களை மிரட்டாதீர்கள். திடீரென எங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது. பள்ளிக்கூடம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்தும் மாஞ்சோலை முகவரியில்தான் உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எங்களை மிரட்டி வெளியேற்றி விடாதீர்கள் என்று அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். மாஞ்சோலையில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம், ஆனால், அரசு எங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் அங்கு வாழ்ந்தது போன்ற சூழ்நிலையை தமிழகத்தில் அரசு அமைத்து கொடுத்தது. அவர்களுக்காக டான் டீ நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுபோல் இல்லாவிட்டாலும், நாங்கள் ஒற்றுமையாக, கௌரவமாக வாழ சமத்துவபுரத்தை அரசு அமைத்துத் தரவேண்டும்” என்றனர்.
இதுகுறித்து கூறும் சமூக ஆர்வலர்கள், மாஞ்சோலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது, தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல வற்புறுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.