சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக மாறி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கட்சியை தொடங்கும்போது, தனது குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் சேர மாட்டார்கள் என கூறி கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெறுகின்றனர். பின்னர், தங்களது பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்களை கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய பதவிகளில் உட்கார வைத்து, கட்சியை தங்களது குடும்ப கட்சியாக மாற்றி விடுகின்றனர்.
தற்போதுள்ள திமுக, பாமக, மதிமுக, தேமுதிக உள்பட பல கட்சிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களை முக்கிய பதவிகளில் நியமித்து கட்சியை ஒரு குடும்ப ஆதிகத்திற்குள் வைத்துள்ள நிலையில், கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவும் தற்போது முழுமையான குடும்ப கட்சியாக மாறி உள்ளது.
ஏற்கனவே தேமுதிக கட்சி தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலேதா உள்ள நிலையில், கட்சியின் பொருளாளராக அவரது தம்பி எல்கே சுதீஷ் இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தேமுதிக இளைஞர் அணி செயலாளராக கேப்டனின் மகன் விஜயபிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ் பொருளாளராக நியமிக்கப்பட்டு இரு பொறுப்புகளையும் கவனித்து வந்த நிலையில், தற்போது விஜய பிரபாகருக்கு இளைஞர் அணி பதவி வழங்கப்பட்டு உள்ளது.
தருமபுரியில் இன்று நடைபெற்று வரும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விஜயபிரபாகரன் இளைஞர்அணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.