சென்னை: சட்டப்பேரவையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அமைச்சர்களுக்கு பாடம் எடுத்தார். அமைச்சர்களின் பதில் நீண்டு வருவதால், நேரத்தை குறைக்கும் வகையில் பேச அறிவுறுத்தினார்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வியாழக்கிழமை (ஏப். 24) உயா்கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. . இன்று காலை 9.30 மணிக்கு அவை கூடியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படும். இதன் தொடா்ச்சியாக, அவற்றுக்கு அமைச்சா் கோவி செழியன், அன்பில் மகேஷ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.
முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் அமைச்சர்கள் நீண்ட விளங்கங்களை கூறுவதல் காலவிரயம் ஆவதாக கருதி, சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தின்போது முதல் கேள்விக்கு பதில், ஆம், இல்லை, பரிசிலிக்கப்படும் என்று கூற அமைச்சர்களை அறிவுறுத்தினார்.
முன்னதாக கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, சுமார் 7 நிமிடங்கள் பேசினார். இதனால் கடுப்பான சபாநாயகர், அமைச்சர் நேருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் சேர்த்து அறிவுரை செய்தார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் நேரு, இன்று கேட்ட கேள்விக்கு மட்டுமல்ல, நேற்று, அதற்கு முன்தினம் கோவை பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சேர்த்துதான் பதில் அளித்துள்ளேன் என்றார்.