கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) இன்று அதிகாலை அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் உள்ள மூன்றடுக்கு வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறையில் கத்தி குத்துக்களுடன் ரத்தவெள்ளத்தில் இருந்த அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த அவரது மனைவி பல்லவியின் புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

மனநிலை பாதிப்புக்கு உள்ளான பல்லவி கடந்த சில நாட்களாக அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ஓம் பிரகாஷின் முகத்தில் மிளகாய் பொடி தூவியதற்கான தடயம் இருந்ததாகவும் கழுத்து உள்ளிட்ட உடலின் பல இடங்களில் கத்தி குத்து இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொலை நடந்த பிறகு, தனது நண்பருக்கு வீடியோ காலில் பேசியுள்ள ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி “நான் அந்த அரக்கனை கொன்று விட்டேன்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்லவி மற்றும் அவர்களது மகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருக்கு அருகில் ஓம் பிரகாஷுக்கு சொந்தமான இடம் இருப்பதாகவும் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் குடும்ப உறுப்பினர்களிடையே எழுந்த தகராறு காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம்…