அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப் பூ டான் ஒரு இன்டெல் குறிப்பில் இதை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெல்காம் பகுதியைச் சேர்ந்த சச்சின் கட்டி, 55, தனது உயர்நிலைப் படிப்பை பெல்காமில் முடித்த நிலையில் பி.யூ.சி மற்றும் உயர் படிப்புகளுக்காக மும்பைக்குச் சென்று, ஐ.ஐ.டி. பாம்பேயில் பி.டெக் பட்டம் பெற்றார். பின்னர் அவர் மாசசூசெட்ஸின் எம்ஐடியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் வசிக்கும் சச்சின் கட்டி ஒரு அமெரிக்க குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெல்லின் வலைத்தளத்தின்படி, சச்சின் கட்டி AI துறையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளார். தொழில்நுட்ப உலகிலும் சச்சின் தனக்கென ஒரு உலகளாவிய பெயரைப் பெற்றுள்ளார்.