1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’லுக்கு மூலகாரணமாக இருந்த சென்னையைச் சேர்ந்த வியாபாரி கடந்த வெள்ளிக்கிழமை அண்ணா நகரில் கடத்தப்பட்டார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எட்வின் (வயது 61) துபாயைச் சேர்ந்த சப்தகிரி என்ற நபர் கூறியதைக் கேட்டு சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்றை தனது துபாய் நண்பருக்கு அறிமுகம் செய்துள்ளார்.
வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவில் உள்ள அறக்கட்டளை பெயரில் 1000 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விரும்புவதாகவும் அதற்கான தகுதியான அறக்கட்டளையை அறிமுகப்படுத்தும்படி எட்வினிடம் துபாயைச் சேர்ந்த சப்தகிரி கேட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அமீனுதீன் என்ற தனது நண்பரிடம் இதுதொடர்பாக கூறிய நிலையில் அவர் தன்வந்திரி என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் மொய்னுதீன் ஆகிய இரண்டு நபர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சப்தகிரி என்பவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அமீனுதீன், வைஷ்ணவி மற்றும் மொய்னுதீன் ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று சப்தகிரியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த டீலை முடிக்க தனக்கு 35 லட்ச ரூபாய் கமிஷனாக கேட்ட நிலையில் அதை அவர்கள் சப்தகிரிக்கு கொடுத்துள்ளனர்.
கமிஷன் பணம் கொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தாங்கள் எதிர்பார்த்த 1000 கோடி ரூபாய் நன்கொடை வராததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் எட்வினுக்கு அழுத்தம் தர ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், எட்வினை நேரில் அழைத்து பேசவேண்டும் என்று கூறி கடந்த வெள்ளிக்கிழமையன்று அண்ணா நகர் வரவழைத்த அமீனுதீன் அவரை அங்கிருந்து அம்பத்தூருக்கு காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், எட்வினின் மனைவி ஆஷ்லியை போனில் தொடர்பு கொண்டு தங்கள் பணத்தை திரும்பப் பெறவேண்டி எட்வினை கடத்தி வைத்துள்ளதாகக் கூறிய அமீனுதீன் நகை பணம் அல்லது செக் உடன் வந்து கணவரை மீட்டுச் செல்லும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அம்பத்தூர் வந்த ஆஷ்லியிடம் இருந்து 25000 ரூபாய் ரொக்கம் மற்றும் மூன்று சவரன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு எட்வினை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் எட்வின் மற்றும் ஆஷ்லி இருவரும் கொடுத்த புகாரை அடுத்து ஆள்கடத்தல் மற்றும் பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அமீனுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.