சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நீட் விவகாரத்தில் இந்நாள் மற்றும்  முந்நாள் முதல்வர்களுக்கு இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

“நீட் தேர்வை ரத்து செய்தால் தான் ‌கூட்டணியில் இருப்போம் என சொல்வதற்கு தகுதி உள்ளதா?  என முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி  பழனிச்சாமியை பார்த்து கேள்வி எழுப்ப, 1999ல் திமுக யாருடன் கூட்டணி வைத்தீர்கள், பாஜக உடன் தானே? என எடப்பாடி பழனிசாமி எதிர்க்கேள்வி எழுப்பினார். இதையடுத்து காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம்  பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து,  மார்ச் 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.  3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணியளவில் தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும் நீட் விவகாரம் குறித்து விவாதம் எழுந்தது.  இதுகுறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்,  நீட் தேர்வில் தமிழகத்திற்கு அதிமுக துரோகம் செய்ததால் தான் 11 மருத்துவ கல்லூரியை ஒன்றிய அரசு கொடுத்தது- அதிமுக செய்தது பேக்கரி டீல் தான் என கூறினார்.

இதையடுத்து பேசிய இபிஎஸ், நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது யாருடைய ஆட்சியில் ? என எடப்பாடி பழனிசாமி எதிர் கேள்வி எழுப்பியதுடன்,  தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞர் வாதாடினார்  என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக காங்கிரஸ் கூட்டணி  ஆட்சியில்தான் என்றவர், ஆனால், நீட்டை ஒழிப்பதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை,  நாங்கள் பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை என்று மறுத்ததுடன்,  எங்கள் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்திருந்தால், நீட் ரத்து செய்யப்படும் என்றுதான் கூறினோம் என்றவர்,கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் ரத்து செய்யப்பட்டிருக்கும் , நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், நீட் சிக்கலை போக்க இப்போதும்  அதிமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியதுடன்,  நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என  அதிமுக சொல்லுமா என கேள்வி எழுப்பியதுடன்,  கூட்டணியில் நீட் தேர்வு சம்பந்தமாக கண்டிஷன் போட அதிமுக தயாரா? , 2031 வரை கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்போது கூட்டணி அமைத்தது ஏன்? 2 மாதத்துக்கு முன்பு வீராப்பாக பேசியது என்ன ஆனது?” என்றார்.

இதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி,  முதல்வர் ஸ்டாலினை பார்த்து,  1999ல் திமுக யாருடன் கூட்டணி வைத்தீர்கள், பாஜக உடன் தானே?  என கேள்வி எழுப்பியவர், அப்போது இதுபான்ற கண்டினை வைத்து  நீட்டை ரத்து செய்திருக்கலாமே என்றார்.

இவ்வாறு நீட் விவகாரத்தில் காரசாரமாக வாதம் நடைபெற்றது.