சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர்.

அதன்படி, 3500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும், மதுரையில் புதிய மேம்பாலம் கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும், கடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைப்பது குறித்து பரிசிலிக்கப்படும் என்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 3,500 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், புதிய பேருந்துகள் வரவர, 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
”மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் ஏ.வ.வேலு, மதுரையில் ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக, புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக கூறியதுடன், மதுரை மீனாட்சி அம்மன், கோயில் தெற்கு கோபுர சந்திப்பு, முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரை, 4-வழி சாலையாக அகலப்படுத்த, தெற்கு வாசல் சந்திப்பு, அருகே உள்ள, ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக, புதிய மேம்பாலம் கட்ட, விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கடலூரில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படுமா என்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசீலன், “எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கான நிறுவனங்கள் கிடையாது. ஆகவே எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தருமாறு அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் பிடிஆர், எனது துறையில் உள்ள சிக்கல்களை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்ப டுகிறது. எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காவும் எனது துறையில் செயல்படுவதில்லை. அதில் சிறிய பங்குதான் எனது துறையின் கீழ் வருகிறது. மற்றவை தொழில்துறையின் கீழ தான் வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறோ அவரிடம் கேட்டால் அவர் செய்து தருவார் என்று கருதுகிறேன். என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை” என்று தெரிவித்தார். இது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பதில் கூறினால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.