சென்னை:  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 21) சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. இது பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை, சர்வதேச கமாடிட்டி சந்தையை பொறுத்தே நிர்ணயம் ஆகிறது.  இதனால்,  ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்ற – இறக்கத்துடன் இருக்கும். மேலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது, மற்றும் மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் சற்றும் எதிர்பாராத விதமாக குறைந்தது தான் இந்த விலை உயர்வு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை  தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் அதிகரித்து,  புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.  அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட சவரனுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது.

இன்று  சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ரூ.72,120-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.  இதன் காரணமாக  பொதுமக்கள்,  சாதாரணமாக ஒரு சரவரனுக்கு ஏதாவது ஒரு நகை வாங்க வேண்டுமென்றால், அதற்காக செய்கூலி சேதாம், ஜிஎஸ்டி என ஒருவர் சவரனுக்கு ரூ.80ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கத்தின் விலை ரூ.71 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,015-க்கும்; சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கடந்த சில நாட்களாக மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வந்த வெள்ளி விலையும் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் ரூ.111-க்கும், கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.