இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் உள்ள அவரது பெயரை நீக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்க குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் (HCA) தலைவராக அசாருதீன் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2023 செப்டம்பர் வரை அதன் தலைவராக நீடித்த நிலையில் அசாருக்கு தொடர்புடையவர்கள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சங்க விவகாரங்களை நிர்வகிக்க நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான ஒரு நபர் குழுவை உச்சநீதிமன்றம் 2023 பிப்ரவரி மாதம் நியமித்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அசாருதீனுக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்தது.
2019 டிசம்பரில் வடக்கு ஸ்டாண்டிற்கு அசாருதீன் பெயர் வைக்கக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சங்கத் தலைவராக அசார் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
HCA விதிகளின்படி எந்தவொரு திட்டத்திற்கும் பொதுக் குழு (AGM) ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இந்த விதியை அசார் மீறியதாக கூறியுள்ளது.
இதை விசாரித்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்க குறைதீர்ப்பு ஆணையம் வடக்கு பெவிலியன் ஸ்டாண்டிலிருந்து அசாருதீனின் பெயரை நீக்குமாறு உத்தரவிட்டதுடன் அசாருதீன் பெயரில் டிக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை HCA குறைதீர்ப்பாளரான (ஓய்வு பெற்ற) வி. ஈஸ்வரய்யா வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் லோக்பாலின் உத்தரவுக்கு எதிராக அசாருதீன் நீதிமன்றம் செல்லத் தயாராகி வருகிறார். இந்த உத்தரவை நிறுத்தி வைக்க நான் நிச்சயமாக சட்டப்பூர்வ உதவியை நாடுவேன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று அசாருதீன் கூறியுள்ளார்.
ஒரு இந்திய கேப்டனின் பெயரை நீக்கச் சொல்வது வெட்கக்கேடான விஷயம். சங்கத்தின் துணை விதிகளின்படி, குறைதீர்ப்பாளரின்/நடத்தை அதிகாரியின் பதவிக்காலம் ஒரு வருடம்.
இந்த வழக்கில், லோக்பாலின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2025 அன்று முடிவடைந்தது, அந்தக் காலத்திற்குப் பிறகு பிறப்பிக்கப்பட்ட எந்த உத்தரவும் செல்லாது.
அவருக்கு சேவை நீட்டிப்பு கிடைக்கவில்லை, இதுபோன்ற ஒரு உத்தரவு ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது மட்டுமே வழங்கப்பட முடியும், ஆனால் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடக்கவில்லை. பிறகு எப்படி அவர்கள் உத்தரவை நிறைவேற்றினார்கள் என்பது தெரியவில்லை என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.