சென்னை: கட்சி விவகாரத்தில் மதிமுக நிறுவனர் வைகோ மற்றும் மல்லை சத்யாவுடன் மோதல் எதிரொலியாக வைகோவின் மகனும், திருச்சி மதிமுக எம்.பி.யுமான துரைவைகோ கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை கோவை அறிவித்து உள்ளார். இது மதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பாமகவில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நிறுவனர் ராமதாஸ் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுகவிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, துரை வைகோ கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி சென்னை தாயகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டி, நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வைகோ முன்னிலையில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ கோபமாக வெளியேறினார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியில் சலசலப்பு நீடித்து வந்தது. மேலும் வைகோவின் தீவிர ஆதரவாளரான மல்லை சத்யாவை, துரை வைகோ கட்சியில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், , கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்தது. அதுமோதலாக உருவெடுத்த நிலையில், சமீபத்தில், திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர். இது மேலும் சலசலப்பை எற்படுத்தியது.
மேலும், துரை வைகோ ஆதரவாளர் சத்யகுமரன், ‘மதிமுகவில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும், ஈ.வெ.ரா., அண்ணா, வைகோ, துரை வைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறலாம். இது துரை வைகோ காலம்,’ என அறிக்கை வெளியிட்டார்.
இதற்குப் பதிலடி கொடுத்த மல்லை சத்யா, ‘மதிமுகவில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர். எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார். ஒருசிலர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க எந்த சக்தியாலும் முடியாது. நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னை சொல்லலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒரு போதும் வரக்கூடாது என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கிறேன் என்றார்.
இதையடுத்து, திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் ஏப்.20-ம் தேதி நடைபெறும் என்றுங்ம, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெடித்தது. துரை வைகோ கட்சியின் நிகழ்ச்சியில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில், தற்போது துரை வைகோ, கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று துரை வைகோ இன்று (ஏப்ரல் 19) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன்.
என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” .
இவ்வாறு தெரிவித்துள்ளார்.