சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில், அதிமுகவும் தனது தேர்தல் பணிகளை தொடங்கியது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்பட சில கட்சிகளை இழுக்க திமுகவும், அதிமுகவும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், வஃபு சட்டம் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு, அதிமுக கூட்டணியில் இருந்து வந்த எஸ்டிபிஐ கட்சி, திமுக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தது. இதையடுத்து, கட்சி தலைவரான நெல்லை முபாரக் சென்னை வந்தது திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தர். இதைத்தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அபூபக்கர் சித்திக் ,. பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றவர், அதிமுக பாஜக கூட்டணி வைத்துள்ளார், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பா.ஜ.க.வின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது? என கேள்வி எழுப்பியவர், அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
இது பா.ஜ.க.வுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்திருக்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பா.ஜ.க. தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.