சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், அமைச்சர் பொன்முடியை நடவடிக்கையை கண்டித்ததுடன், அவர்மீது புகார் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து திமுக தலைவமை அவரிடம் இருந்து தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியை பறித்தது. பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தமன் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார். அதேபோல், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், அமைச்சர் பொன்முடி மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் தெரிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. உயர்மட்ட நிர்வாகிகள், மற்ற மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்திருப்பதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.