சென்னை: நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தவெகவுக்கு உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானை உள்ள நிலையில், அந்த சின்னத்தை தவெக கொடியில் பயன்படுத்தி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  யானை சின்னத்தை தவெக பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், தவெக கட்சி கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை சின்னம், தங்களது கட்சிக் கொடியில் உள்ளதாகவும், ஆகவே யானை சின்னத்தை தவெக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவானது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்ததையடுத்து, தவெக கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது என பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் வாதிட்டார்.

இதையடுத்து, வழக்கு குறித்து ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோருக்கு நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.