ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிலும் குறிப்பாக 5 வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்கப்படுவதில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

ஆஸி., வரும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், விசா பெற்று வருவோர், அதை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.

அந்த வகையில், குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநில மாணவர்கள் ஆஸி., வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தகவல் பரவியது.

அதேவேளையில், ஆஸ்திரேலிய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைத்துள்ள நிலையில், பல பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பல்கலைக்கழகங்களில் உள்ள பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், விசா முறைகேடு காரணமாக கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த இந்த 5 மாநில மாணவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதை காரணம் காட்டி இந்திய மாணவர்களுக்கு விசா மறுக்கப்படுவதாக தகவல் வெளியானது.

ஆனால், ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்கள் பட்ஜெட் பற்றாக்குறையால் இந்திய மாணவர்கள் என்றில்லாமல் பொதுவாக வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை 20 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.