சென்னை: அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே திமுக எம்.பி. ராசா உள்பட சிலர், இதுபோல ஆபாசமாக பேசி உள்ள நிலையில் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்துக்கள் குறித்தும், சைவம், வைணகம் குறித்தும் அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது பெண்களை கொந்தளிக்க செய்தது. இதையடுத்து, அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கோரினார். இருந்தாலும், பெண்கள் அமைப்பினர் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரரித்தார். அப்போது, பொன்முடியின் பேச்சை திரையிட செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சராக உள்ளவர்கள் பொறுப்புடன் பேச வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில், அமைச்சர், மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை எனவும், பொன்முடி கூறிய இதே கருத்தை வேறு யாரேனும் கூறியிருந்தால் இந்நேரம் குறைந்தது 50 வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்குகே என்று காவல்துறையை கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த பேச்சுக்காக காவல்துறை ஏன் பொன்முடி மீது இதுவரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், வீடியோ ஆதாரம் இருக்கும்போது புகார் இல்லாமலே வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இவ்விவகாரத்தில் வரும் 23ம் தேதிக்குள் FIR பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர் பொன்முடி மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து டிஜிபி பதிலளிக்கவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்தார்.