சென்னை: நடுத்தர மக்களின் ஆபாந்தவனாக இருந்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் தினசரி உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை நோக்கி சென்றுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், 2025ம் ஆண்டு பிறந்தது முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. சவரன் ரூ.55 ஆயிரம் முதல் 60ஆயிரம் வரை இருந்து வந்த தங்கத்தின் விலை இந்த ஆண்டு மளமளவென உயர்ந்து, தற்போது சரவன் தங்கம் ரூ. 72ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இன்று தங்கத்தின் விலை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.71,360ஆக உள்ளது. கடந்த இரு வாரங்களில் பவுனுக்கு ரூ.5,965 உயர்ந்துள்ளது. வெள்ளி நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய சித்திரை மாதம் முதல் அடுத்தடுத்து திருமான மாதங்கள் வருவதால், தங்கத்தின் விலை உயர்வு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காகவும், சேமிப்பிற்காக தங்கம் வாங்கும் எளிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய மக்களின் முக்கிய முதலீட்டு பிரிவாக இருக்கும் தங்கத்தின் விலை இன்று உள்நாட்டு சந்தையிலும் சரி, வெளிநாட்டு சந்தையிலும் சரி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) இன்று காலை தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இதற்கு முக்கிய காரணம், உலகளவில் நிலவி வரும் தொடர்ச்சியான வர்த்தகப் போர் குறித்த கவலைகளும், உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த அச்சமும் தான். மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், தங்கத்திற்கான தேவை அதிகரித்திருப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, MCX-ல் ஜூன் 5 ஆம் தேதிக்கான தங்கத்தின் பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் விலை புதிய வரலாற்று உச்சமாக ஒரு கிராம் 9,589.40 ரூபாயை எட்டியது. இதன் பின்னர், காலை 10.15 மணியளவில் 9,586.90 ஆக இருந்தது. இந்த திடீர் விலை உயர்வு தங்கத்தின் டிமாண்ட் முதலீட்டு சந்தையில் அதிகரித்துள்ளது என குட் ரிட்டர்ன்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.