திருவனந்தபுரம்: மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் அதிகாரத்தை குறைத்தது மட்டுமின்றி, குடியரசு தலைவருக்கும் கெடு விதித்த்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய மத்தியஅரசு அவசர சட்டம் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கடுமையாக சாடியுள்ளார்.  உச்ச நீதிமன்றத்தால் அரசியல மைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் எதற்காக என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர்  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அரசியல் சாசனத்தில் காலவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயிக்க அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

திருத்தங்களைச் செய்வது நாடாளுமன்றத்தின் உரிமை.  அங்கு அமர்ந்திருக்கும் இரண்டு நீதிபதிகள் அரசியலமைப்பு விதிகளின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள். இது எனக்குப் புரியவில்லை. அரசியலமைப்புத் திருத்தம் என்பது நாடாளுமன்றத்தின் தனிச்சிறப்பு. ஒரு காலக்கெடு இருக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்திருக்கலாம்,

 உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இணைந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயம் செய்துள்ளனர். இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது வரம்பு மீறிய செயல் ஆகும்.

இது தொடர்பாக நீதிபதிகள் மத்திய அரசுக்கு தங்கள் பரிந்துரையை வழங்கி இருக்கலாம். அல்லது கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி இருக்கலாம். எல்லா முடிவுகளைம் நீதிமன்றங்களே எடுக்கும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு? சட்டமன்றம் எதற்கு?

ஆளுநர்கள் மசோதாக்களை நீண்டகாலத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதற்கு காரணம் இருக்கக்கூடும். இதுபோல்தான் ஆளுநர்கள் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கும்.

இதைத்தொடர்ந்து நெறியாளர்,  இதே பிரச்சினையை எழுப்பி  கேரள எல்.டி.எஃப் அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு குறித்து கருத்து கேட்டார்.

இதற்கு பதில் கூறிய ஆளுநர், கேரள வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தமிழகத்தைப் போன்றது அல்ல என்றார். ‘அது வேறு விஷயம். ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டுமா இல்லையா என்பது அவரது/அவளுடைய தனிச்சிறப்பு.  உச்ச நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் அந்த மாதிரியானது அல்ல.   ஆனால் ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதைச் செய்ய வேண்டும் என்பது அரசியலமைப்பிற்குள் உள்ளடங்கிய ஒன்றல்ல. “இது அரசியலமைப்புச் சட்டம் கூறுவதிலிருந்து வேறுபட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய கேரள ஆளுநர் ஆர்லேகர் ,  கேரள ராஜ்பவனில் தற்போது எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என்றும்  கூறினார். இங்கே ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்ட எந்த மசோதாக்களையும் நான் ஏற்கனவே பரிசீலித்துவிட்டேன். சில மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இன்றைய நிலவரப்படி, ராஜ்பவனின் முன் அத்தகைய மசோதாக்கள் எதுவும் நிலுவையில் இல்லை,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.