சென்னை: பெண்கள் குறித்து அவதூறு, மீனாட்சி அம்மன் கோயில் வரி நிலுவை உள்பட  5 முடக்கிய நிகழ்வுகள் குறித்து  சட்டப்பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ வானதி கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம்  தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து,   அன்றைய தினம், அவையின் அலுவல் ஆலோசனைக் குழு கூடி, அமர்வின் கால அளவு குறித்து முடிவு செய்தது. தொடர்ந்த,  மார்ச் 15, சனிக்கிழமையன்று மாநில அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு, வார விடுமுறைகள் என 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்ரல் 15ந்தேதி) மீண்டும்  அவை கூடியது.

இன்றைய அமர்வில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி குறித்து விவாதிக் கவலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

வனத்துறை அமைச்சர் அவர்கள் இந்து வாழ்வியல் முறையின் குறியீடுகளை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்து சமீபத்தில் பேசியது பெரும் பான்மையான மக்களின் மனதை புண்படுத்தி உள்ளதால் அவரை அரசு பதவி நீக்கம் செய்வது குறித்தும் அதனால் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்த்து விவாதிக்க வலியுறுத்தி உள்ளார்.

அடுத்ததாக,  சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள மின் கட்டணம் ரூ.1 கோடியை காரணம் காட்டி மின்சாரம் வழங்க முடியாது என மாநகராட்சி ஆணையர் அறிவித்ததால் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும்,  வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு முறையாக ஊசி செலுத்தாமல் பல இடங்களில் ஊசி குத்தி இரத்தம் வெளியேறி குழந்தை இறந்ததால் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

அதுபோல,  திருவண்ணாமலை மாவட்டம், நவாப்பாளையம் கிராமத்தில் அணையில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதை தடுத்த காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

மேலும்,   சென்னை வேளச்சேரியில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருந்த காவலரை போதை ஆசாமிகள் கடுமையாக தாக்கியது குறித்தும் அதனால் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

ஆனால், இந்த தீர்மானங்கள் மீது விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி கொடுப்பாரா என்பது கேள்விக்குறியே. ஏற்கனவே எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் பல்வேறு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு மறுத்து வரும் நிலையில், பாஜகவின் தீர்மானங்களுக்கு அனுமதி கொடுப்பாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.