சென்னை
இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடும் நிலையில் முதல்வர் மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வர உள்ளார்.

கடந்த மாதம் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. பிறகு மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது.
தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக சட்டசபைக்கும் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதாவது, 10-ந்தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் சட்டசபை கூட்டம் இல்லை. பிறகு நேற்று (14-ந் தேதி) தமிழ் புத்தாண்டுவரை விடுமுறை விடப்பட்டு 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்தது.
இன்று 5 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடும் நிலையில், இன்று தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர உள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.