சென்னை: தமிழ்நாடு ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களும் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, இனிமேல் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருப்பார்.

பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்ககாமல் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்து வந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடிய நிலையில், தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்தது. இது தொடர்பான தீர்ப்பும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான 10 மசோதாக்களும் சட்டமானது. இதுகுறித்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததார். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக ஆளுநர் கூறினார். இந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதை அவர் 2023-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.
இதையடுத்து நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ரிட் மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்ரல் 8-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில், தமிழக சட்டசபையில் நிறைவேறிய மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அவரது செயல் சட்டவிரோதம் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.