அந்தமானில் உள்ள பழங்குடியின தீவுக்கு தடையை மீறிச் சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு பழங்குடி இனம் சென்டினலீஸ் பழங்குடி இனம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிவாசிகளைப் போன்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வரும் இவர்கள் அந்த தீவிற்குள் வரும் வெளிநபர்களை மூர்க்கமாகத் தாக்கி கொன்றுவிடுவதாகக் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலமுறை இவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தனிமையில் இருப்பதையே தாங்கள் விரும்புவதாகவும் தங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.

அதையும் மீறி இவர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயல்பவர்களை வேல் கம்பு, வில் அம்பு உள்ளிட்ட கூறிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இதேபோல் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்த நிலையில் அவரைப் பிடித்து கொலை செய்து அங்கேயே புதைத்த சம்பவம் அரங்கியதுடன் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழங்குடியின குழுக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்பான சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற அமைப்பும் இந்த தீவுக்கு செல்வது ஆபத்தானது என்று கூறியுள்ளதுடன் அங்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது யூ-டியூபர் மிகைலோ விக்டோரோவிச் பாலியாகோவ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த தீவிற்குள் நுழைந்ததாகவும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தங்கியிருந்த அவர் அந்த தீவின் பழங்குடியின மக்களுடன் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத நிலையில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

போர்ட் பிளேர் திரும்பிய வழியில் மீனவர்களின் கண்ணில் பட்ட பாலியாகோவ் குறித்து காவல்துறையில் அவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்தாண்டு ஜனவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் இதுவரை மூன்று முறை அந்த தீவுக்குச் செல்ல முயற்சி மேற்கொண்டதாகவும் மார்ச் மாதம் தான் மேற்கொண்ட முயற்சியில் அந்த தீவை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த தீவில் சிறிது நேரம் இருந்ததாகவும், விசில் அடித்தும் யாரும் வராத நிலையில் கோக் மற்றும் இளநீரை வைத்து யாராவது வருவார்களா என்று பார்த்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தவிர, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களில் அதற்கான ஆதாரம் இருந்ததை அடுத்து மார்ச் 31ம் தேதி அவரை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட இந்திய நிலப்பரப்பிற்குள் ஊடுருவியது உள்ளிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள பாலியாகோவிற்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.