டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, புதிய ஆதார் செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.
ஆதார் விவரங்கள் கசியவிடப்படுவதாக பல ஆண்டுகளாக புகார் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ஆதார் அட்டைகள் அல்லது அதன் நகல் உள்ளிட்ட காகிதங்களை எடுத்துச் செல்லும் தேவையை நீக்கும் வகையில் புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
போன்-பே, ஜி-பே உள்ளிட்ட யூபிஐ செயலி போல முக அடையாளத்தைக் கொண்டு இயங்கும் இந்த செயலி மூலம், தேவைப்படும் இடங்களில் தேவையான விவரங்களை மட்டும் பகிர முடியும்.
மேலும், இந்த தரவுகள் பகிரப்பட்டவரை தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சோதனை அடிப்படையில் இந்த புதிய செயலியை நேற்று அறிமுகப்படுத்திய அவர், “ஆதார் சரிபார்ப்பை எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாக இந்த செயலியை விவரித்தார்.
இதன் மூலம், ஆதார் சரிபார்ப்பு UPI பணம் செலுத்துவது போல் எளிமையாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் அத்தியாவசியத் தரவை மட்டுமே பகிர்ந்து கொள்ள பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும், எப்போதும் அவர்களின் ஒப்புதலுடன் பகிர்ந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது என்றும் அவர் கூறினார்.
தற்போது சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி, விரைவில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.