சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தர் என்பது உறுதியான நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பான சட்டம் இன்று இரவே அமலுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி அனுமதி வழங்காத நிலையில், உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தின் மூலம், அந்த 10 மசோதாக்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளப்பி உள்ளன. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி, பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே பதவி வகிக்க முடியும் என்பதால், இந்த மசோதா, இன்று இரவே சட்டம் ஆகிறது என்றும், அரசிதழில் இன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம், ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக முதல்வர் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதா, இன்றிரவுக்குள் சட்ட மாகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்த நிலையில், இச்சட்டத்தை அரசிதழில் வெளியிடுவது குறித்து சட்டத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.