சென்னை: அதிமுகவினர் கருப்பு சட்டையில் பேரவைக்கு  வந்தது எனக்கு மகிழ்ச்சி! நல்ல வேளை காவி உடையில் வரவில்லை என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  நேற்றைய அமர்வின்போது, விவாதிக்க வலியுறுத்தி வரும் அதிமுக எம்எல்ஏக்கள்,  டாஸ்மாக் ஊழல் குறித்து  அந்த தியாகி யார் என பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்ட நிலையில், அதற்கு மறுத்த சபாநாயகருக்கு எதிராக அந்த தியாகி யார்  என பதாதைகளுடன் கோஷமிட்டனர். இதனால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் சிலர் ஒருநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து,  சட்டப்பேரவையின் அன்றைய அமர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  உங்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து  வருகை தந்தனர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக  அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இன்றும்  சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்

இதுகுறித்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், , “எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினர் கருப்பு சட்டையோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் கருப்பு சட்டையோடு வந்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல வேளை காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்திருந்திருக்கிறார்கள். இதற்காக என்னுடைய அளவுகடந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோரிடம் சிரிப்பலை எழுந்தது.