சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்க கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 1முதல் 9-ம் வகுப்புக்கு ஆண்டிறுதி தேர்வு குறித்த திருத்தப்பட்ட விரிவான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 6 முதல் தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 21வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வித் துறை இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ”அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றதை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொகுத்தறி (SA) மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு, ஆண்டுத் தேர்வு 8.4.2025 முதல் 24.4.2025 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் கால அட்டவணையின்படி நடக்கும் என, அனைத்து தொடக்க கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
தொகுத்தறி மதிப்பீடு, ஆண்டுத் தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். நடுநிலைப் பள்ளியில் வினாத்தாள் களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் பாடம் வாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத்தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கிட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) வினாத்தாள்களை TN EMIS உள்நுழைவில் 19.3.2025 முதல் 21.03.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும். நகல் எடுக்கப்பட்ட வினாத்தாள்களை, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும், வகுப்பு வாரியாக, பாட வாரியாக, மற்றும் பயிற்று வழி வாரியாகப் பிரித்து தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது வகுப்பு, பாடத்தின் பெயர்,பயிலும் வழி ஆகியவற்றை எழுதி ஒட்ட வேண்டும்.
அனைத்து பள்ளிகளுக்கும் 3 ஆம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு, ஆண்டுத்தேர்வு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி அன்று நடைபெற இருக்கும் பாடத்திற்குரிய வினாத்தாளை மட்டும் எடுத்து மதிப்பீடு நடத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.
நடுநிலைப் பள்ளியில் 6முதல் 8 வகுப்புகளுக்கு 3 ஆம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in இணைய தளத்தில் முன் கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு இருக்கும்.
வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பிரிண்டரை பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
வினாத்தாள்கள் நகலெடுத்தல், உறையிலிட்டு பள்ளிகளுக்கு வழங்குதல் ஆகிய செயல்பாடுகளுக்கு பள்ளிவாரியாக நிதி அளிக்கப்படுகிறது”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.