சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.22 கோடி.. நொய்யல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.21 கோடி நாவாய் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை.
ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள்
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம்! ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள்
ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்
ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சி:
ஓலைக் குடிசைகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் குறித்து முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டிருந்த கருணையினையும், குடிசையில்லா தமிழ்நாடு அமைந்திட வேண்டும் என்ற அவரது பெருங்கனவையும் நினைவுகூறும் வகையில், கடந்த ஆண்டு ‘கலைஞரின் கனவு இல்லம்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.
தமிழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமங்களையும் சென்றடையும் வகையில், தரமான சாலை வசதிகளை உருவாக்கிடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், 2025-26 ஆம் ஆண்டு 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ.2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்கிட முடிவு செய்து, 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.120 கோடி விடுவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ், ஊரகப் பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகளை கட்டித் தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் புதிய வீடுகள் ரூ.600 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெற்றிடும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் 40.87 கோடி மனிதசக்தி நாட்கள், ரூ.13,392 கோடி செலவினத்தில் எய்தப்பட்டுள்ளது. ஆனால், 2024-25 ஆம் ஆண்டில் 27-11-2024 முதல் 11-03-2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,839 கோடி ஊதியம் மற்றும் ரூ.957 கோடி பொருட்கூறுக்கான நிதி என மொத்தம் ரூ.3,796 கோடியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
இந்த நிலுவைத் தொகையை உடனே விடுவித்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.