சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், யார் அந்த சார் என்ற கேள்வி முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம் மாணவி ஒருவர் திமுக அனுதாபி ஞானசேகரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் யாரிடமோ சார் என்று பேசியதாக தகவல் வெளியான நிலையில், யார் அந்த சார் என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அதன்படி, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரித்து வந்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்யும் வகையில் அவருக்கு சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் 3 மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை போன்று ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது 2வது கட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன், யாரோ ஒருவரிடம் பேசுவது போல் நடித்து, அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காக தொலைபேசியில் ‘சார்’ என்று அழைத்ததாகவும், உண்மையில் மறுபுறம் யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை வளாகத்திற்குள் நுழைந்ததிலிருந்து அவர் தனது பைக்கில் புறப்படும் வரை அவரது மொபைல் போன் ‘ஃப்ளைட் மோடில்’ இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.