டெல்லி: தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த விஷயத்தில் திமுக எம்.பி.க்களை இழிவாக பேசிய மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்.

புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இதனால் மத்திய -மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. நேற்று பாராளுமன்றத்தில், இது தொடர்பாக கடும் விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என்று கூறினார். அவரது கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதையடுத்து அவர் தனது வார்த்தையை திரும்ப பெற்றார். தொடர்ந்து அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். மேலும், மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளார். அத்துடன், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய, ரூ.2152 கோடி நிதியை வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில், திமுக எம்.பி.க்கள், மத்தியஅரசின் தேசிய கல்வி கொள்கை, மும்மொழி திட்டங்களை எதிர்த்து, பதாதைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து கூறிய திமுக எம்.பி. கனிமொழி, “நாங்கள் மும்மொழிக் கொள்கையிலும் NEP-யிலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறி, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நேற்று, அவர் (தர்மேந்திர பிரதான்) மிகவும் மோசமான முறையில் பதிலளித்தார், நாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் கூறினார். இது அவர் பேச வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கும் மொழி அல்ல. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்”
Patrikai.com official YouTube Channel