சென்னை: தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என கூறி பின்னர் வாபஸ் பெற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை யில், திமுகவினர் அவரது கொடும்பாவி எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு எம்.பி.க்களை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கல்விநிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களுக்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று இழிவுபடுத்திப் பேசினார். இது நாடாளுமன்ற லோக்சபாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழக எம்பிக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களை அவமதித்து பேசிய பேச்சை திரும்பப் பெற்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆனால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த இழிவான விமர்சனத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? என கடுமையாக விமர்சனம் செய்தார். அதுபோல, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தர்மேந்திர பிரதானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சால் கொந்தளித்த சென்னை திமுகவினர் சைதாப்பேட்டை பகுதியில் அவரது கொடும்பாவியை எரித்து கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பல இடங்களிலும் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவியை திமுகவினர் எரித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.