தேனி: பெரியகுளத்தில் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சங்கையா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், “தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தப் பெண் நேற்று மாலை தமது வீட்டின் முன் பகுதியில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஒரு நபர் சென்றுள்ளார். பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த பெண் அருகே சிறிது நேரம் அந்த நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளம் பெண் ‘ஏன் இங்கே நிற்கின்றீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்த நபர் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் நின்றிருந்தார். இங்கே நிற்காதீர்கள் என்று அந்த இளம் பெண் கூறியுள்ளார். அந்த பெண் எச்சரிக்கை செய்ததையும் மீறி அந்த இளம் பெண்ணையே பார்த்தபடி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் வீட்டுக்குள் செல்ல முயன்றார்.
இதையும் படிங்க: ஸ்ரீவைகுண்டம் அருகே 11ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு…பேருந்தை மறித்து மூவர் கும்பல் வெறிச்செயல்!
அப்போது அந்த நபர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். அப்போது வீட்டுக்குள் இருந்த இளம் பெண்ணின் கணவர் வெளியே வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் தப்பி ஓட முயன்றார். எனினும் இளம் பெண்ணின் கணவரும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அந்த நபரை துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,”என்றார்.
இதையடுத்து அந்த நபரிடம் பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த நபர் பெயர் சங்கையா என்பதும், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்கரை பேரூராட்சி துணைச் செயலாளராக பதவி வகித்து வருவதும் தெரியவந்தது. எனினும் இளம் பெண் அளித்த புகாரின் பேரில் சங்கையா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.