சென்னை:  மத்தியஅமைச்சர்  தர்மேந்திர பிரதான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என கூறிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கான வரியை விடுவிக்க முடியுமா முடியாதா?  என்பதற்கான பதிலை மட்டும் கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கிய நிலையில், திமுக எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மறுப்பதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,   தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை மேற்கொண்டு வருகிறது.  தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, பேசிய தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன்,  தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது தமிழகத்தில் கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது ஏற்க முடியாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, என்றார்.

இதற்கு பதில் அளித்து மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் , புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. மாணவர்களை தமிழக அரசு வஞ்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ஹிமாச்சல் ஆகிய மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்கின்றன. தவறான தகவல்களை தெரிவிப்பதோடு மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைக்கின்றது. மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது.

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பது தொடர்பாக எம்.பி.,க்கள், தமிழக கல்வி அமைச்சருடன் என்னை நேரில் சந்தித்தனர். கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 15ல் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட தமிழக அரசு தற்போது யூ-டர்ன் அடிக்கிறது. (தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என விமசர்னம் செய்தார்.)

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் சேர தமிழக முதல்வர் சம்மதித்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்; யார் அந்த சூப்பர் முதல்வர் என்று எம்.பி., கனிமொழி கூற வேண்டும் என  பேசினார்.

இதற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறும்போது, மும்மொழிக் கொள்கையை தமிழகம் நிச்சயம் ஏற்காது. தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என்ற தர்மேந்திர பிரதானின் பேச்சு வேதனை அளிக்கிறது. கல்வி நிதியை விடுக்க வலியுறுத்தி தான் மத்திய கல்வி துறை அமைச்சரை தமிழக எம்.பி.,க்கள் உடன் சந்தித்தேன். தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்னைகள் இருக்கிறது. முழுமையாக ஏற்க முடியாது என தெளிவாக கூறினோம் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரதான்,  எனது வார்த்தைகள் தமிழக எம்.பி.,க்களை காயப்படுத்தி இருந்தால் அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இது குறித்து பார்லிமென்ட் வளாகத்தில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது,  மும்மொழிக்கொள்கை குறித்து தமிழக அரசுக்கு புரிதல் இல்லையே தவிர, மற்றபடி எந்த கொள்கையும் இல்லை எல்லாம் அரசியல் தான். வட மாநிலங்களில் பலர் மும்மொழியை தெரிந்து வைத்துள்ளனர். எனது மகள் கூட அவரது பள்ளியில் 3வது மொழியாக மராத்தி படித்து வருகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க மறுக்கிறோம் என எந்த காரணத்தையும் தமிழக அரசு கூறவில்லை. நாகரீகமற்றவர்கள் என கூறிய வார்த்தையை திரும்ப பெறுகிறேன் என்றார்.

இதற்கிடையில்,  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, லோக்சபாவில் தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

அதேபோல், காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அவையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடந்தது. தொகுதி மறுசீரமைப்பு விவாகாரத்தில் விவாதம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறி தி.மு.க., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!.

தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?. NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.