டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் எப்போதும் போல புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இந்த கூட்டத்தொடரில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, வஃபு வாரிய சட்ட திருத்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அவையை முடக்க திட்டமிட்டு உள்ளன. அதுபோல, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள், நகல் வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் குறித்து விவாதம் கோரி ஏராளமான அறிவிப்புகளை அனுப்பத் தயாராகி வருகின்றன. இந்த விஷயத்தை அறிந்த மக்கள், சர்ச்சைக்குரிய வக்ஃப் சட்டத் திருத்தங்களை “ஜனநாயக முறையில்” தடுக்க எதிர்க்கட்சி முயற்சிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர், அதாவது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.பின்னர், பிப்ரவரி 13-ம் தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும், மார்ச் 10ம் தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 2-ம் பகுதியில், திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழக மசோதா 2025-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். இதன்படி, கிராமப்புற மேலாண்மை ஆனந்த் மையம் இனி பல்கலைக்கழக அந்தஸ்துடன், திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். அதனுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் ஒன்றாக அது அறிவிக்கப்படும். இதேபோன்று கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகளும் மக்களவையில் தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டு உள்ளன.
ஆனால், எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து, அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்த தயாராக உள்ளன,
இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரிவிதிப்பு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான தங்களுடைய பரிந்துரைகள் நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஏற்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்களை நகலெடுப்பது குறித்து குறுகிய கால விவாதம், கவனத்தை ஈர்த்தல் மற்றும் விதி 377 போன்ற பல்வேறு விதிகளின் கீழ் விவாதம் நடத்தக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் (TMC), சமாஜ்வாடி கட்சி (SP) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆகியவை இரு அவைகளிலும் பல அறிவிப்புகளை சமர்ப்பித்துள்ளன – இந்தப் பிரச்சினை அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம் (EC) மீது புதிய எதிர்க்கட்சி தாக்குதலைத் தூண்டியுள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தீவிரமான விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
வக்ஃப் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் “முறையாக” விவாதிக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
“வக்ஃப் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் வரக்கூடும், காங்கிரஸ் இதை எதிர்க்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை (மேலும்) பல கட்சிகள் கூட இதை எதிர்க்கும்” என்று மாநிலங்களவை உறுப்பினர் மேலும் கூறினார்.