சென்னை: மாநகராட்சி பகுதிகளுக்குள் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட 57 வாகனங்களை  சென்னை மாநகர மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,   பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக கூடுதலாக வாங்கப்பட்ட,  டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57 புதிய வாகனங்களை  மேயர் ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதுதொபடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணியை 7.1.2025-ல் மேயர் பிரியா முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில், 7.1.2025 முதல் 16.1.2025 வரை 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக 17.1.2025 முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக ஏற்கனவே உள்ள 102 வாகனங்களுடன் கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57 புதிய வாகனங்களை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 1.1.2025 முதல் 28.2.2025 வரையிலான இரண்டு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண்காணிப்பு படையினரால் ரூ. 13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், துணை கமிஷனர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை கமிஷனர் கே.ஜெ.பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார், பிரிமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.