சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும். என அனைத்துகட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எனும் சதியை அனைத்து கட்சிகளும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அதிமுக, விசிக, பாமக, தவெக உள்ளிட்ட 58 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
மக்கள் தொகையை கட்டப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. இது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை. தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 8 தொகுதிகளை இழந்து தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.
“அனைத்துக்கட்சி கூட்டம் தமிழர்களின் உரிமையை காக்க கூட்டப்பட்டுள்ளது. தொகுதி மறு வரையறை என்னும் கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது. அதனால், தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் 31ஆக குறையும் ஆபத்து உள்ளது.
அதனால், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
இந்த சதியை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து முறியடிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரக்கூடிய தண்டனையாகவே இதை பார்க்கிறேன்” தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கும். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.
மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.