சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு போராட்டத்தை அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவர்களின் பணி சூழல் இங்கு ஆரோக்கியமானதாக இல்லை. அதிக பணிச்சுமை, சிரமங்கள், பல்வேறு சவால்களுடன் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இளைய மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கரோனா பேரிடரின்போது பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா அரசு வேலை கேட்டு குழந்தைகளுடன் சுகாதாரத் துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்தும், சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டும், அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை.
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியம் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய போராட்டத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது.
புதிதாக மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை துவக்குவதில் முனைப்புக் காட்டும் அரசு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் பணியிடங்களை உருவாக்கவில்லை எனவும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
“அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன், மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை தரப்பட வேண்டும்.
சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஆனால், மருத்துவர்களின் பணிச் சூழல் இங்கு ஆரோக்கியமானதாக இல்லை.
குறிப்பாக அதிக பணிச்சுமை, சிரமங்கள், பல்வேறு சவால்களுடன் இளைய மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு (PGs) பணிச்சுமை அதிகமாக இருப்பது மட்டுமன்றி அவர்களுக்கு போதிய விடுதி வசதி (Quarters) கூட தரப்படவில்லை.
இதனால் பெண் மருத்துவர்கள் மிகுந்த சிரமப்படுவது மட்டுமன்றி, பாதுகாப்பும் இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.
முதுகலை மருத்துவ மாணவர்களும் (PGs) மனிதர்கள் தான். அவர்களாலும் தினமும் குறிப்பிட்ட மணி நேரம் தான் பணி செய்ய முடியும். அவர்களுக்கும் வார ஓய்வு தரப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அரசாணை 354:
மருத்துவ மாணவர் மருத்துவராக பயின்று பயிற்சி பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிறது. ஒரு அரசு மருத்துவராக பரிணமிக்க தேவைப்படும் நீண்ட காலம், வரன்முறை அற்ற அரசு மருத்துவரின் பணி நேரம், பணிச்சுமை, பணியின் போது ஏற்படும் மன அழுத்தம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, சுகாதாரக் கட்டமைப்பில் பணியாற்றும் இளம் மருத்துவர்களின் நலன் கருதி, அவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2009-யில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அரசாணை 354 பிறப்பிக்கப்பட்டது.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும். இதற்காக, அரசை வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வருகிறோம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததும், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2019-ம் ஆண்டு போராட்டத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து உறுதியளித்தார். இதன் காரணமாக அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் லட்சுமி நரசிம்மனை நாங்கள் இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது.
மருத்துவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை:
நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் அரசு மருத்துவர்களுக்கு தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத் திய பிறகும், அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை. அரசாணை 354-இன் படி அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் மருத்துவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம் உள்பட சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை தந்துள்ள அரசு, தமிழ்நாடு முழுவதும் ‘முதல்வர் மருந்தகம்’ தொடங்கியுள்ளது. இருப்பினும் அரசு மருத்துவர்களை தொடர்ந்து ஊதியத்திற்காக போராட வைப்பது மிகப்பெரிய வரலாற்று பிழையாகவே அமையும்.
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் (Basic Pay) குறைவாக இங்குள்ள எம்.பி.பி.எஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு தரப்படுகிறது.
போராட்டம் அறிவிப்பு:
மற்ற மாநில மருத்துவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது முதலமைச்சருக்கு நன்றாகவேத் தெரியும். அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,
மார்ச் 18ஆம் தேதி முதல் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மின்னஞ்சல் அனுப்புதல்,
மார்ச் மாதம் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 11ஆம் தேதி மேட்டூர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வது எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவ, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, போராட்டத்திற்கு முன்னதாகவே மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.