கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இயக்கம் கடந்த வாரம் தடைபட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக பந்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது யாருடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நடத்தப்படும் பந்த் அல்ல, இது கன்னட மக்களுக்காக, கன்னடர்களுக்காக, கர்நாடகாவின் முன்னேற்றத்திற்காக, கர்நாடகாவின் வலிமைக்காக நடத்தப்படும் பந்த் என்று அவர் கூறியுள்ளார்.
பெல்காமில் மராத்தியர்களால் கன்னட நடத்துனர் தாக்கப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வாட்டாள் கோரினார்.
பந்தை எதிர்த்துப் பேசும் முட்டாள்கள் இருக்கலாம். வானம் பூமியில் இடிந்து விழுந்தாலும், மூடல் தேதி மாறாது. மார்ச் 22 அன்று கர்நாடக பந்த் நடத்துவோம். கன்னடத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உணர்வு ஏற்பட வேண்டும், அனைத்து கன்னடர்களும் வீதிகளில் இறங்க வேண்டும். வேறு வழியில்லை என்று கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.