டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி 20, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கொலீஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க முன்மொழிந்துள்ளது.
அதன்படி,
(i) நீதிபதி ராமசாமி சக்திவேல்
(ii) நீதிபதி பி. தனபால்
(iii) நீதிபதி சின்னசாமி குமரப்பன், மற்றும்
(iv) நீதிபதி கந்தசாமி ராஜசேகர்

ஆகிய நான்கு நீதித்துறை அதிகாரிகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மே 19, 2023 அன்று நியமித்தது. அவர்களை நிரந்தர நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்யும் மத்திய சட்ட அமைச்சகம், அதை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். அதை ஏற்று குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிடுவார். அதன்பிறகு இவர்கள் 4 பேரும் உயர்நீதி மன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுவார்கள்.
நீதிபதி ராமசாமி சக்திவேல், 1998 இல் வழக்கறிஞராகப் பதிவுசெய்தவர். 2011 இல் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் மாவட்ட நீதித்துறையில் சேர்ந்து தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிபதி, தமிழ்நாட்டின் நிர்வாகத் தலைவர் மற்றும் அதிகாரப்பூர்வ அறங்காவலர் (AGOT), சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் முதன்மை மாவட்ட நீதிபதி போன்ற பதவிகளை வகித்தார்.
நீதிபதி பி. தனபால், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். கடந்த 2011 ஆம் ஆண்டு மாவட்ட நீதித்துறையில் சேர்ந்தார். கூடுதல் மாவட்ட முன்சிஃப் ஆகவும், பின்னர் தர்மபுரியில் கூடுதல் துணை நீதிபதியாகவும், III கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், II கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் (PCR,) மற்றும் திருநெல்வேலி யில் I கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். கடலூரில் முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் புதுச்சேரியில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
நீதிபதி சி. குமரப்பன், 2011 ஆம் ஆண்டு மாவட்ட நீதித்துறையில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்ற தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் (ஐடி-கம்-புள்ளிவிவரங்கள்) மற்றும் பதிவாளர் ஜெனரலாகவும் பணியாற்றினார், மேலும் பதவி உயர்வு பெற்றபோது சென்னை முதன்மை தொழிலாளர் நீதிமன்றத்தில் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
நீதிபதி கே. ராஜசேகர், 2011 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக (தொடக்க நிலை) பதவியேற்றவர். நாமக்கல், சேலம், சென்னை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரில் பணியாற்றி, பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.