கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் வரியுடன் 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
அமெரிக்காவின் அண்டை நாடுகளான இவ்விரு நாடுகளும் தங்கள் எல்லைகளை பலப்படுத்தவும் எல்லைதாண்டிய குற்றநடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து இவ்விரு நாடுகள் மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.

எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகளை தடுக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள அமெரிக்கா அதுவரை இந்த இரண்டு நாடுகள் மீதும் வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அதன் எல்லையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களை நிலைநிறுத்தவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், ஃபெண்டானில் கடத்தல் மற்றும் பணமோசடியை எதிர்த்துப் போராட கூட்டு முயற்சிகளைத் தொடங்கவும் கனடா ஒப்புக்கொண்டது.
அதேபோல், சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மெக்சிகோ தனது வடக்கு எல்லையை 10,000 தேசிய காவல்படை உறுப்பினர்களுடன் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளையில், சீனாவுக்கு 10% கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ள அமெரிக்கா அதனை இன்று முதல் செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.