சென்னை: மக்களின் எதிர்ப்பு காரணமாக, டங்ஸ்டன் திட்டத்தை மத்தியஅரசு ரத்து செய்தது. இதையடுத்து,  அரிட்டாப்பட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை  மதுரை செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நாளை  மதுரையில்  நடைபெறுகிறது. அரிட்டாபட்டியில் நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  மூர்த்தி தலைமையில் அந்த பகுதி மக்கள் இன்று காலை தலைமைச்செயலகத்தில் நேரில்  அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளார்.

 ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான ‘டங்ஸ்டன்’ கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் இந்த கனிமம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவன நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்து மத்திய அரசிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து  அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியில் உள்ள திமுக மற்றும் அதிமுக உள்பட அரசியல்கட்சிகள் முறையான எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அந்த பகுதியில் உள்ள அரிட்டாபட்டி உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த 4,981.64 ஏக்கர் நிலம் ‘டங்ஸ்டன்’ கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய, சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாகவும் திமுக அரசுக்கு மத்தியஅரசு கடிதம் எழுதியது. ஆனால், அதற்கு திமுக அரசு பதில் அளிக்காத நிலையில், டங்ஸ்டன் ஏலத்தை மத்தியஅரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஏலத்தில்,  வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனம் ஏலம் எடுத்தது.  அந்த  நிறுவனத்துக்கு கடந்த நவம்பர் மாதம் மத்தியஅரசு  உரிமம் வழங்கப்பட்டது.

இதையறிந்த அந்த பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததுடன்  திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டங்களை நடத்தினர். இந்த கனி சுரங்கத்தின்ல்,  பல்லுயிர்ப் பெருக்க மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் வாதிட்டனர். அதுபோல தமிழர் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடவரைக் கோவில்கள் போன்ற பண்பாட்டு, கலாசார அம்சங்களும் அங்கு இருப்பதால் அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகே விழித்துக்கொண்ட திமுக அரசு, இது தொடர்பாக அதிமுக குற்றம் சாட்டியதுடன், மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமான தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.  அதைத்தொடர்ந்த ஜனவரி  9-ந்தேதி தமிழ்நாடு சட்டசபையில், ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, தமிழக பா.ஜனதாவும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது.

மாநில தலைவர் அண்ணாமலை அந்த பகுதி விவசாயிகளுடன் பேசி, திட்டத்தை ரத்து செய்ய துணை நிற்பதாக கூறினார்.  அத்துடன் அந்த பகுதி மக்களை திரட்டி அவர்களில் முக்கியமான சிலரை அழைத்துக்கொண்டு, டெல்லி சென்று, மத்திய சுரங்கம் மற்றும் கனிமத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.  இதையடுத்து,  ‘டங்ஸ்டன்’ திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், மீண்டும்,  நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் என்று சொல்லப்படும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் அண்ணாமலை டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை மீண்டும் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்படும் என தகவல்கள் பரவின. அதுபோல, மத்திய அரசும், டங்ஸ்டன் திட்டத்தை கைவிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, மதுரையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த மாத இறுதி யில் இரண்டு நாள் நிகழ்ச்சியாக தமிழ்நாடு வரும் கிஷன் ரெட்டிக்கு அப்போது பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை  அவசரம் அவசரமாக மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்கிறார்.  அங்கு அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் சிலர் அமைச்சர் மூர்த்தியுடன் வந்து, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று, அங்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.   அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்றும் எடப்பாடியின் கேள்விக்கும் முதலமைச்சர் பதில்