ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள  ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதியோர்களுக்கான  தபால் ஓட்டுப்பதிவு இன்று காலை (ஜன.,23)  தொடங்கியது.

இவிகேஎஸ் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில்,  பிப்.,5ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தலை அ.தி.மு.க., தே.மு.தி.க,  பாக மற்றும் த.வெ.க. உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. ஆனால், திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகின்றன. இதனால் அங்கு இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், ஏராளமான சுயேச்சைகளும் களமிளங்கி உள்ளனர். மொத்தம் 46 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி  அமைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டள்ளது. மேலும்,   ஓட்டு பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஓட்டுக்களை தபாலில் செலுத்தலாம். வீடுகளுக்கே வாக்கு பதிவு அதிகாரிகள் வந்து வாக்குகளை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் இன்று தொடங்கி உள்ளது.

அதன்படி,   ஈரோடு கிழக்கு தொகுதியில், 209 வயதானவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என, 256 பேர் தபால் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் வாக்கினை பெறும் வகையில் இவர்களுக்கு ’12-டி’ படிவம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஒப்புதல் பெற்றனர் .

இதைதயடுத்து, இன்று தபால் வாக்கு பதிவு தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடிக்கு வர முடியாத  முதியோர், அதாவது 85வயதுக்கு மேற்பட்டோரின்  வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் வகையில் அதிகாரிகள் வாக்குப் பெட்டியுடன் சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

முதியோரின் வீடுகளுக்கே நேரடியாக சென்று  ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இன்று முதல் ஜன., 27ம் தேதி வரை ஓட்டுப்பதிவு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர்.