ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி (Docking Success) இன்று வெற்றிகரமாக நடைபெற்றது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்பட பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதன்மூலம் இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் வியத்தகு சாதனையை எட்டியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, சீனா இதுபோன்ற சாதனைகளை செய்துள்ள நிலையில், இந்தியாவும் தற்போது ‘ஸ்பேஸ் டாக்கிங்’ (Space docking) செய்து, விண்வெளித்துறையில், ‘ஸ்பேஸ் டாக்கிங்’ செய்யும் வலிமையுள்ள 4வது நாடு என்கிற பெருமையை பெற்றுள்ளது.
பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்திற்கு விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டு விண்கலன்களை இணைக்கும் திட்டம் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ (Space docking) என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 30ந்தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவியது.
400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு செயற்கைகோளும் 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில் நிலை நிறுத்தபட்டது. அதன் பின்னர் அதனை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. இதை இணைக்கும் முயற்சி ஜனவரி 9ந்தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிறுசிறு இடையூறுகள் காரணமாக, Space docking செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, ஜனவரி 13ந்தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து ஜனவரி 16ந்தேதி இணைப்பு நடைபெறும் என இஸ்ரோ தகவல் தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும், 1.5 கி.மீ இடைவெளியில் செயற்கைகொள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், இன்று காலை 500 மீ தொலைவில் இந்த செயற்கைகோள் இணைப்பு நடவடிக்கை தொடரும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், இன்று ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி (Docking Success) வெற்றிகரமாக நடைபெற்றது என இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
டாக்கிங் செய்த பிறகு, இரண்டு செயற்கைக்கோள்களை ஒரே பொருளாகக் கட்டுப்படுத்தும் பணி வெற்றிகரமாக உள்ளது.
வரும் நாட்களில் டாக்கிங் மற்றும் மின் பரிமாற்றச் சோதனைகள் தொடரும் என இஸ்ரோ கூறியுள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைப்பதை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக
@isro விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள்.
இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என வாழ்த்தியுள்ளார்.
மத்தியஅமைச்சர் ஜிதேந்திரசிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்த்துக்கள் #ISRO. இறுதியாக அதைச் செய்துள்ளது. நம்பமுடியாத… இணைப்பு முழுமையாக… நிகழ்ந்துள்ளது. இது அனைத்தும் உள்நாட்டு “பாரதிய நறுக்குதல் அமைப்பு”. இது பாரதிய அந்திரிக்ஷா நிலையம், சந்திரயான் 4 & ககன்யான் உள்ளிட்ட லட்சிய எதிர்காலப் பணிகளை சீராக நடத்துவதற்கு வழி வகுக்கிறது. பிரதமர் திரு.
@நரேந்திரமோடி யின் தொடர்ச்சியான ஆதரவு, பெங்களூரில் உற்சாகத்தை உயர்த்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.