டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பு முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே, இரட்டை இலை மற்றும் அதிமுக தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் சேலம் மணிகண்டன் என்பவர் மனு அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் நிலையில், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ்.சூர்ய மூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது, இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், கூறியது. இதையடுத்து இந்த வழக்கு டிசம்பர் 4, 2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கட்சி சார்பில், முன்மொழியப்பட்ட வேட்பாளர்களுக்கு ‘இரண்டு இலை’ சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தனிநபர் ஒருவர் செய்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து சொல்ல வேண்டும் அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும் “தொண்டர்களை குழப்பும் நோக்கில், அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத சிலர் மனு அளித்துள்ளனர்” என்று கூறியுள்ளது.