சென்னை:  தமிழ்நாட்டில்  நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை என சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக  அதிமுக கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவாதம் காரசாரமாக நடைபெற்றது.

யார் அந்த சார் என்பது குறித்து ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால், அவர்கள் அரசியல் கட்சிகளாக இருந்தாலும், சமூக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகளாக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. மேலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தாலே, இரவோடு இரவாக அவர்கள் கைது செய்யப்படும் அவலங்களும் தொடர்கிறது. இது மக்களிடையே கடுமையான அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரில் திமுக நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு பின்புலமாக உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், இந்த போராட்டங்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தது. அதுபோல மதுரை டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்களையும் தடுத்ததுடன், அவர்களையும் கைது செய்துநடவடிக்கை எடுத்தது.

ஆனால், நேற்று (ஜனவரி 7ந்தேதி) மாவட்ட தலைநகரங்களில் ஆளுநரை கண்டித்து, திமுக நடத்திய போராட்டம் எந்தவித இடையூறும் இன்றி, காவல்துறையினர் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதுடன், உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, திமுக தடையை மீறி போராடியதாகவும், அவர்கள்மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நேற்று மாலை காவல்துறை தரப்பில் ஒப்புக்கு சப்பானியாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில், அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த, கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இன்றைய 3வது நாள் அமர்வில் கேள்வி நேரம் முடிந்தது,  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக  அதிமுக கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை   சட்டப்பேரவையில் விவாதத்துக்கு  எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.  அப்போது, இதுதொடர்பான வழக்கு  நீதிமன்றத்தில்  நடைபெற்று வருவதால் சுருக்கமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க சபாநாயகர் அறிவுறுத்தினார். இதையடுத்து அதன்மீதான விவாதங்கள் நடைபெற்றன. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் கட்சியில் ஒருவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பிரதான எதிர்க்கட்சி தலைவரை திட்டமிட்டு தாக்கி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்படவில்லை, எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்கள். ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

பா.ம.க.,எம்.எல்.ஏ., ஜி.கே மணி பேசியதாவது: போராட்டத்திற்கு அனுமதி தரப்படுவதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் பெரிய அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இது போதாது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ்  மாநில தலைவரும் எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை பேசும்போது, ”அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நடவடிக்கை மற்றும் காவல்துறை அணுகுமுறையை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இதனை வாக்கு வங்கி அரசியலாக்கி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் செல்போனில் யாரிடம் பேசினார் என்பதை கண்டுபிடியுங்கள். மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சரிடம் பேசி கண்டுபிடிக்க வேண்டும். தொலை பேசி எண்ணை வைத்து யாரென்று எளிதாக கண்டுபிடிக்கலாம். பாலியல் கொடுமையைவிட அதை அரசியலாக்குவது அதைவிட கொடுமையானது. தமிழ்நாட்டில் மனு நீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் இல்லை.  யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்,”என்று கூறினார்.

செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசுவதை ஏற்க முடியாது என்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கொடூரம் நேர்ந்துள்ளது. முதல்வர் ஏன் தற்போது வரை அண்ணா பல்கலை. விவகாரத்தில் விளக்கம் தரவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

தவாக தலைவர் வேல்முருகன்,  அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். மேலும்,  “பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள், மத்திய அரசின் பொறுப்பில் உள்ள தளத்தில் இருந்து வெளியாகியுள்ளன. கைதான ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 சதன் திருமலைகுமார் பேசும்போது,  பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளதால், வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அந்த சார் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பேசினார்.

விசிக உறுப்பினர்  சிந்தனைச்செல்வன்,  பேசும்போது,  அண்ணா பல்கலை முடங்கியிருப்பதற்கு கவர்னரே காரணம் என குற்றம் சாட்டினார்.

கொங்கு ஈஸ்வரன் பேசும்போது, பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளதால், வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்  மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு துணை வேந்தரை நியமிக்காததே காரணம் என்றார்.

பாஜக எம்எல்ஏ காந்தி, பேசும்போது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்துக்கு தமிழ்நாடு அரசுதான்  முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த  பாலியல் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி  அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானது ஏற்க முடியாதது. தேசிய தகவல் மையத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதிலில்,  போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை  என கூறியதுடன்,   குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கள நிலவரத்தை ஆய்வு செய்து போலீஸ் அனுமதி தரும்.  நேற்று அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என கூறினார்.

மேலும்,  போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னால், முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். அதுவும் அனுமதி கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் மட்டும் தான் அனுமதி கொடுக்க முடியும். திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும். ஆளுங்கட்சியாக இருந்தாலும், தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே மணிக்கு எடுத்து சொல்லுங்கள். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞான சேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்று விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின்,   யார் அந்த சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள்.

“இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரங்களில் கோவையும், சென்னையும் உள்ளது பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம் தான் பொள்ளாச்சி சம்பவத்தில் சிபிஐ வசம் சென்ற பிறகே உண்மை வெளிவந்தது பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மீது அதிமுக ஆட்சியில் தாக்குதல் நடத்தப்பட்டது”

இந்த வழக்கில் குற்றாவாளியை உடனடியாக கைது செய்யாமல் செய்யாமல் விட்டிருந்ததால் அரசை குறை கூறலாம் எனவும் குற்றாவாளியை கைது செய்த பிறகும் பிரச்னை ஆக்குவது என்பது அரசியல் ஆதாயம் என   குற்றம் சாட்டிய முதல்வர், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை கசிய மத்திய அரசின் உள்துறையே காரணம்  என்றார். மேலும்,

மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்  என கூறியதுடன்,  அஇ திமுகவின் ஆட்சியில் நூறு சார் என்னால் கேட்க முடியும் எனவும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  அதிமுக எம் எல் ஏக்கள் சட்டப்பேரவையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர்