சென்னை:  அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு படித்து வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த  ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் மாணவி கொடுத்த புகாரில் இருந்த மாணவியின் விவரங்களை காவல்துறை வெளியிட்டதும், குற்றவாளிக்கு ஆதரவான மன நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் திடீர் பேட்டி கொடுத்ததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை, திமுக அரசின் கைத்தடியாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இதனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என  எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய மகளிர் ஆணையமும் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அண்ணா பல்கலைகழக வளாகம் முழுவதும் 140 முன்னாள் ராணுவ வீரர்கள் செக்யூரிட்டிகளாக பணிபுரிந்து வரும் நிலையில் கூடுதலாக 40 பேரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைத்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆணை பிறப்பித்துள்ளது.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?